Wednesday 29 June 2016

தூளிக்குள் உறங்கும் காடு

தூளிக்குள் உறங்கும் காடு

- - - - - - - -

சூன்யதேசத்தின் ஆதிக்கிழவி
இரவின் மையெடுத்து காடு வரைகிறாள்

நிலவின் நிழலில் ஆடும் தூளியொன்றில்
ஈன்ற பிள்ளையின் அழுகையை தூங்கவைக்க
காற்றுக்குள் குரல்நிரப்பி தாலாட்டுகிறாள்

வரைந்த காட்டுபூச்சிகளின் இரைச்சல்
காட்டுக்குள் மங்களம் பாடின
காற்றொலியில் தவழ்ந்த இசைபூச்சிகள்
தாலாட்டோடு கலக்கிறது

வனமெங்கும் பரவும் வரைதூரிகை
கிளையிடுக்கில் உதிர்ந்த சருகாகின
சருகுதிரும் சப்தத்தில் சிதறிய காடு
துயில்ந்த பிள்ளையின் கனவில் இசையாகிறது

புலன்நீட்டி நகர்கிற ஆமைக்குஞ்சுவின் பாதையில்
இறந்த காடொன்றின் அச்சு.
சாம்பல் மிதித்து நகரும் உடல்
இசைக்காற்றில் குழலூதுகின்றன

ஆதிக்கிழவி வரைந்து சிதறிய மைத்துண்டுகளை
பறவை அலகுக்குள் இடுக்குகிறது

காட்டோடும் இசையோடும் பறக்கும் பறவை
நிலவின் நிழலில் ஆடும் தூளியில்
துயிலும் பிள்ளையானது ..

- அதிரூபன்

No comments:

Post a Comment