Wednesday 29 June 2016

வனா

வனா

- - - - - - - - - - -

காட்டுநீரள்ளி குரல்நனைக்க
தன்னை காற்றாக்கிக்கொண்டாள் வனா

காற்றுக்கு தேகம் பொருத்தி
காட்டுயிராக்குகிறாள் குளிரை

பச்சையத்திசைகளை மேயும் மோகம்
கூட்டுமரங்களின் உடலை அசைக்கிறது

காடு மலர்ந்து
காடு உதிர
வனத்தை கூந்தலில் பதுக்கி மகிழ்கிறாள்

நிலம் அதிர பெருகும் சப்தம்
பெருங்கூடொன்றின்
அலகில் இருந்து வழிகிறது

இலையில் இருந்து பெய்கிற
உறைந்த மழையொன்று
காட்டுக்குள் குளிர்நிரப்பி
காற்றுக்குள் கூடுகிறது

குகைமிருகங்களின் கூடல்
வெம்பாறையின் சூட்டில் நனைய
வனா இதமாய் சூடுரசுகிறாள்

மலைஇருளில் அசைகிற பச்சையப்பூ
பெருமழையுதிர்வில் நீர்நிறமாகி
காட்டுநிழலை நனைக்கிறது

மழைபெய்யாப் பொழுதின் காடு
வனாவின் தாகத்தில் உலர்கிறது

இசையென ஒழுகும் நீரருவிச்சப்தம்
நீளவால்குருவியின் சிறகிலிருந்து தெரிக்க
உதிர்ந்த நீரில் ஊறுகிறாள் வனா

நீரள்ளி குரல்நனைக்கிற நினைவு
வனாந்திர வெளியில் காய்ந்துகிடக்கிறது

காடெல்லாம் நீந்தநினைக்கிற
ஒருத்தியின் ஆசை
காட்டுப்பூக்களில் பூத்திருக்கிறது

இப்பொழுது
உயிர்களின் சப்தம்
வனா வனா !

- அதிரூபன்

No comments:

Post a Comment