Wednesday 29 June 2016

மரணத்தை புசித்து

மரணத்தை புசித்து

- - - - - - - - - -

தானிய நிலங்களில்
ஈரம் வற்றிப்போயிருந்தன

பசியின் வயிறுகளில் விழுந்த பள்ளங்களில்
சூரியன் உதித்தெரிக்கிறது

தாகத்தின் நரம்புகளை துளையிட்ட கதிர்கள்
மரணத்தின் மேனியை படுக்கையாக்கின

இறையை நம்பியிருக்கிற உயிர்கள்
அறுவடைகாலங்களில் பிணங்களை நடுகின்றது

இளவெயிலின் தாகம்
ஆறாமறிவுக்கடலை உறிஞ்சி
நெருப்பை உமிழ்கிறது

உயிர் கேட்கிற உணவு
இந்த நிலத்தின்
மனிதக்கழிவோடு அழிந்துபோனது

இறையான்மையின் கருணை
பிறந்த குழந்தையின் பட்டினிச்சாவைப்போல்
குப்பையில் கிடக்கிறது

உங்கள் நம்பிக்கைகள்
மழைநேர விண்மீனைப்போல

எப்போதாவது,
வானத்திலிருந்து
விழுகிற உணவுப்பொட்டலங்களில்
விஷம் இல்லையென்று நம்பிக்கை வைத்திருங்கள்

உங்கள் நிர்வாணங்களை
மாறிமாறி புசித்து நிரம்பிய வயிறுகளை
பசிக்கு பழக்கவேண்டாம்

நம்மைபோன்றவருக்கு
மரணம் பழக்கப்பட்ட ஒன்று ....

- அதிரூபன்

தூளிக்குள் உறங்கும் காடு

தூளிக்குள் உறங்கும் காடு

- - - - - - - -

சூன்யதேசத்தின் ஆதிக்கிழவி
இரவின் மையெடுத்து காடு வரைகிறாள்

நிலவின் நிழலில் ஆடும் தூளியொன்றில்
ஈன்ற பிள்ளையின் அழுகையை தூங்கவைக்க
காற்றுக்குள் குரல்நிரப்பி தாலாட்டுகிறாள்

வரைந்த காட்டுபூச்சிகளின் இரைச்சல்
காட்டுக்குள் மங்களம் பாடின
காற்றொலியில் தவழ்ந்த இசைபூச்சிகள்
தாலாட்டோடு கலக்கிறது

வனமெங்கும் பரவும் வரைதூரிகை
கிளையிடுக்கில் உதிர்ந்த சருகாகின
சருகுதிரும் சப்தத்தில் சிதறிய காடு
துயில்ந்த பிள்ளையின் கனவில் இசையாகிறது

புலன்நீட்டி நகர்கிற ஆமைக்குஞ்சுவின் பாதையில்
இறந்த காடொன்றின் அச்சு.
சாம்பல் மிதித்து நகரும் உடல்
இசைக்காற்றில் குழலூதுகின்றன

ஆதிக்கிழவி வரைந்து சிதறிய மைத்துண்டுகளை
பறவை அலகுக்குள் இடுக்குகிறது

காட்டோடும் இசையோடும் பறக்கும் பறவை
நிலவின் நிழலில் ஆடும் தூளியில்
துயிலும் பிள்ளையானது ..

- அதிரூபன்

வனா

வனா

- - - - - - - - - - -

காட்டுநீரள்ளி குரல்நனைக்க
தன்னை காற்றாக்கிக்கொண்டாள் வனா

காற்றுக்கு தேகம் பொருத்தி
காட்டுயிராக்குகிறாள் குளிரை

பச்சையத்திசைகளை மேயும் மோகம்
கூட்டுமரங்களின் உடலை அசைக்கிறது

காடு மலர்ந்து
காடு உதிர
வனத்தை கூந்தலில் பதுக்கி மகிழ்கிறாள்

நிலம் அதிர பெருகும் சப்தம்
பெருங்கூடொன்றின்
அலகில் இருந்து வழிகிறது

இலையில் இருந்து பெய்கிற
உறைந்த மழையொன்று
காட்டுக்குள் குளிர்நிரப்பி
காற்றுக்குள் கூடுகிறது

குகைமிருகங்களின் கூடல்
வெம்பாறையின் சூட்டில் நனைய
வனா இதமாய் சூடுரசுகிறாள்

மலைஇருளில் அசைகிற பச்சையப்பூ
பெருமழையுதிர்வில் நீர்நிறமாகி
காட்டுநிழலை நனைக்கிறது

மழைபெய்யாப் பொழுதின் காடு
வனாவின் தாகத்தில் உலர்கிறது

இசையென ஒழுகும் நீரருவிச்சப்தம்
நீளவால்குருவியின் சிறகிலிருந்து தெரிக்க
உதிர்ந்த நீரில் ஊறுகிறாள் வனா

நீரள்ளி குரல்நனைக்கிற நினைவு
வனாந்திர வெளியில் காய்ந்துகிடக்கிறது

காடெல்லாம் நீந்தநினைக்கிற
ஒருத்தியின் ஆசை
காட்டுப்பூக்களில் பூத்திருக்கிறது

இப்பொழுது
உயிர்களின் சப்தம்
வனா வனா !

- அதிரூபன்

Tuesday 14 June 2016

வயிற்றில் உதிக்கும் சூரியன்

வயிற்றில் உதிக்கும் சூரியன்

- - - - - - - -

கடல்நீர் சுவைக்கிற நாக்கில்
தாகம் ஊறக்கண்டேன்

சூடு மேல் பூசுகிறது

நிர்வாணமாக்குகிறது வெயில்

மணல்குகைக்குள் புதைந்திட எழும் எண்ணத்தை
இந்த ஆதி நிர்ணயித்திருக்கிறது

நிலம் நீராகி தடங்கள் மூழ்கிய ஆழத்தில்
உடலை அமிழ்த்த நினைக்கிறேன்

கண்களின் குளிரை
பூமியில் இறக்கி
அதன் இருளில் கொஞ்சமாய் வாழவேண்டும்

கள்ளிச்செடியின் காய்கள்
சிறுகுடலின் பாதியிலும் நிரம்பவில்லை
பசிக்கிறது

வெயிலை குடித்து ஒழுகுகிற வியர்வை
பாலையின் ஒளியில் ஊற்றாகிறது

சிறுநீர் நனைத்த மணலை அள்ளி
என் உடலில் நீர்த்திருக்கிற சூரியன்மேல் பூசுகிறேன்
கடலில் மூழ்குகிற சூரியனுக்கு இந்தகுளிர் போதாமை தான்

கைகளை கால்களுக்கிடையில் கிடத்தி
முழங்கால் தலைதொடும் நிலையில்
சுருண்டு படுத்துக்கிடக்கிறேன்

ஒரு மிருகத்தின் நிழல்
வெயிலை மறைத்து அருகில் நிற்கிறது

என் வயிறின் பள்ளத்தில் விழுந்த சூரியனை
கொஞ்சமாய் கொஞ்சமாய் குருதியொழுக புசிக்கிறது
என் அருகாமை மிருகம் ...

- அதிரூபன்

Saturday 11 June 2016

ஆகாசம் அருந்தி வாழும் நிலம்

ஆகாசம் அருந்தி வாழும் நிலம்

- - - - - - - -

காட்டின் வயதை பேசும் அடிமரம்
இலைவிரிப்பில் முகம் பார்க்கும் ஆகாய தேகம்
வனமெங்கிலும் அகம் நிருவும் உயிர்கள்
வாழ்வின் காரணத்தை மீட்டுகின்றன

இருளேறாத நிலவின் கண்களில்
ஒரு காடு பிறக்கிறதென கொள்வோம்

இறகு கூடொன்றில் குளிர் பூசுகிற நிலவு
பறவையின் பிரசவத்தில் பாதிவலியை சுகந்தமாக்குகிறது

வயிற்பெருத்து கர்பத்தோடு அமர்கிற தட்டான் தோகைகள்
தனிமையை மருத்துவத்திற்கு செலவாக்கும்

யானையின் காதுகள்
தடித்த மரத்தின் நிழலை விசுறுகின்றன
நிழலொதுங்கி வெய்யில் காய்ந்த நிலத்தில்
யுகாந்திரத்தை மேய்கிறதொரு துதிக்கை

முறிந்த மரத்தின் பட்டைகளில்
குடையென விரிகிறது காளான்பிஞ்சுகள்
இறந்த மரத்தின் உயிர்குடித்து வளர்கின்றன
குடைகாளான்கள்

காட்டில் பிறந்த பறவைகள்
மனதசப்தத்தில் பறந்து செல்கின்றன

தனிமையின் நிழலில் அமர்ந்து
மலைமுகம் காண்கிற விழிகள்
காட்டின் பூரணத்தில் அமிழ்ந்து சாவட்டும்

- அதிரூபன்

ருசி ஒழுகிய பொழுதில்

@ ருசி ஒழுகிய பொழுதில் @

பரீக்குட்டியின்
ப்ரணய ஜீவனின்
கடைசி துடிப்பு நிகழ்வு
ஒரு ஞாலத்தின் ஜென்மத்தை
குருதி ஒழுக வைக்கிறது

அகிலத்தின் பசிக்காக
ப்ரணய நாவின் சுவைக்காக
குடுவை உயிரின் மீதிக்காக
இச்ஜீவனின் கொலை
அகப்புனிதமாகிறது .

புல் தோகைகளை அறைத்து
கூழ் பழசு பல குடித்த,
என் பின்புழுக்கைகளை சுமக்க
இந்த விதிமண்டலத்தில் வழியில்லை .

ஏதோ ஒரு
புனித தேகப்பெருமூச்சு ,
என் பிந்தைய காலத்தில்
இல்லாமல் போயிருந்தால்,
நான் பிறவா பிறப்பே
அம்சமாய் இருந்திருக்கும் .

அழகுச்சொப்பணம்
அம்சப்பிரியம்
ஆடித்திரிந்த ஸ்பரிசம்
அசந்துபோன மரணக்களைப்பு
இவையே,
என் மரணத்திற்கு பிந்தைய மகிழ்வுகள் .

கருமை நிறைந்த என் சிறுநாக்கு
புல் திண்று பழகிய வரலாறு
இப்பேரண்டமே அனுமதித்த ஒன்று.

ஆட்டுக்குட்டியின் நாருசி
இறைச்சியை மதித்திருந்தால்
என்னவாயிருக்குமோ,
சில ஜென்மத்தின் நிலை .

பாவம் ,
பரீக்குட்டியின் ஆட்டுக்குட்டிக்கு
நம்மைபோல்
கொலை செய்யத்தெரியாது ..

- அதிரூபன்