Thursday 26 May 2016

ஈரவலியில் முளைத்த பூஞ்சைக்காளான்கள்

வலித்தடங்களின் ஈரம்

---------------------

முதிர்இலையின் மஞ்சள்முகம்
காட்டுநிழலின் தனிமையருந்தி
இரைப்பை நிரம்பி வழிகிற பசியால்
சல்லிவேரின் மார்பை பருகுகிறது

குழலூதி பசியருந்துகிற மூங்கில்காடு
பார்வையற்றவளின் உதடுகளால்
ஒலியின் ஊனத்தை வாசித்து
கானல்வெளியில் வெம்பிக்கொண்டிருக்கிறது

வலையோட்டையில் தப்பிவிடுகிற
மீன்குஞ்சுகள்
வற்றிய நதியில் மீன்களாகின

மழைநீரில் மூழ்கிய காகித மழலைகள்
பின்னொரு நாள்
கருகி சாம்பலாகின்றன
நீரின் தாகம் ஒரு வெயிலை பருகுகிறது

ஈரலின்சுவை உமிழ்கடலை பெருக்க,
செம்மறிக்கிடாவின் தோல்
மட்டைவேலியில் சொட்டிக்கொண்டிருக்கிறது

இரவில் உதிர்ந்த இரத்த வலியால்
விழித்திருக்கிற தனியொருத்தியின் கனவில்
உறக்கம் தற்கொலை செய்துகொண்டது ..

- அதிரூபன்

No comments:

Post a Comment