Sunday 20 March 2016

இருள்நிறதாகம்

இருள் நிற தாகம்

- - - - - - - - -

நிலவின் குளிரில் மேய்ந்துகொண்டிருக்கிற விலங்குகள்,
மோகப்பசியின் உடல்சூட்டிற்குள்
தன்னை பொருத்த நினைக்கின்றன

நிறமற்ற பூக்களின் மகர்ந்தத்திற்குள்
பூச்சி வடிவிலொரு காமம் இறங்கி,
தன் பிறப்புநாக்கிலிருந்து பெருங்கதை பேச
காம்புகள் பெருத்து நிறைமாதமாகின்றன பூக்கள்

பச்சையத்தின் வேர்களுக்கு
காதலிக்க சொல்லித்தருகிற ஆகாயத்தின் நீர்த்துளி,
பெரும் மின்னல் வெளிச்சத்தில்
முத்தமிட நாநீட்டுகிறது

வெய்யில்பாறையின்
இலைஇல்லாத பிறந்த செடிகளின் ரோமங்கள்,
சூரியனை மென்று உடலரும்புகிற ரகசியம்
நான் மட்டும் அறிவேன்

உடல் திறந்து பார்த்து
நிறைந்திருக்கிற காற்றின் உயிரில்
இருள்நிறக் காமம் கலந்திருப்பதன் அவசியம்,
எனக்கும் உனக்கும் சம்பந்தப்பட்டது..

- அதிரூபன்

No comments:

Post a Comment