Friday 29 January 2016

ஞானைக்காதன்

காதுக்குள் இறங்கி கதை பேசுகிறவன்

------------------

காட்டின் ஓலம் தன்னை
இரட்சிக்கப் பெற்ற ஒருவன்,
மரங்களுக்கெல்லாம் பெயர்வைத்துவிட்டு
யானையின் தடம் ஒன்றில் துயில்கிறான்

ஆதிஷா என்கிற
ரப்பர் மரமொன்று,
அவன் கனவெல்லாம் கிளைகள் பரப்பி
கண்களுக்குள் சருகை உதிர்க்கிறது

அருவியின் பேரிசையில் நனைந்த
ஈரப்பறவையொன்று,
தன் சிறகுக்கூட்டின் இறகுக்காட்டிலுருந்து
ஒரு மயிர்பீழியை அவன் மார்பில் உதிர்க்கிறது

கனவொன்றில் சருகும்
மாரொன்றில் மயிர்பீழியும்
அவன் இயக்கிய உறக்க எந்திரத்தை உசுப்ப,
சருகெல்லாம் உயிர்தேடுகிற ஒரு கதையை
வனமெங்கும் கூறி வருகிறான்

மிருக காலடிச்சூட்டில் முகம்வைத்து
நாசி நிறைய சுவாசம் உண்கிறான்

மூலிகைமரத்தின்
விதையொன்றின் வயிற்றைத்தடவி,
கர்ப்பத்தில் மிதக்கும் பெருங்காடொன்றை
வாயில் சுவைத்து,
வனம் தோறும் வாசமாய் நடக்கிறான்

"யானையின் காதுக்குள் இறங்கி"
கதைபேசுகிற ஒரு பைத்தியக்காரனின் மொழி
நமக்கெல்லாம் புல்லரிக்கிற மனோபாவம் தான்

காதுகள் விரிந்து
தடங்கள் அகன்று
தன்உரு பெரிதாகி யானையாகிறவனின் கதையைத்தான்,
இந்தவனக்காதுகள் கேட்டுவருகின்றன ..

- அதிரூபன்

No comments:

Post a Comment