Sunday 10 January 2016

வனம் வாழ்தலுக்கானது

வனமெல்லாம் என்வானம்

-------------------

ஒரு அடர்ந்த கருப்பு பாதை. இருளின் முகத்தை அணிந்துகொண்டு மர உயிர்களின் பூரண இருப்புக்குள் நுழைந்து, மனம் விரும்புகிற ஒன்றின் மடியில் துயில, நெடுநாட்களுக்கான ஒரு பிரியம் இன்று பிறக்கப்போகிறது. பசுமைகளை பூசியிருக்கிற ஒரு பச்சைக்காடு. சருகுகளை வழித்தடங்களில் பரத்தியிருக்கிறது காடொன்றின் வயது.ஆன்மா வந்துசெல்கிற பாதையை எந்தக்காடும் உருவாக்கிவைத்திரிக்கவில்லை.வழியெங்கும் இலைகளின் உயிர் சருகுகளுக்குள் சங்கமிக்க, கால்தடங்களுக்குள் சருகு நொருங்கும் கணத்தில் இறந்தஇலைகளின் உடம்பு தெரித்து வழிபிறக்கிறது. வனத்தின் முற்றத்தில் நுழைந்திருக்கிறேன். ஒரு தனிஉயிர் இந்த உயிர்கடலில் நுழையநினைப்பது எத்தனை பிடித்தமானது.? வனத்தின் எல்லைத்தீண்டலெங்கும் உயிர்களின் வாசம். இந்த உயிர்களின் பாதையில் பயணிப்பதுதான் எத்தனை அரிதானது.? அரிதுக்குள்ளே ஆன்மா நுழையவிரும்புகிற விருப்பம்தான் எனக்கும் வாய்த்திருக்கிறது. வனத்தின் வாது நுழைகிறேன். ஒரு பிரபஞ்சத்தின் இருப்பை இந்த வனம் தனக்குள் வைத்திருக்கிற ரகசியம்தான் அலாதியானது.நிறங்களின் ஊடே சலனங்களை ஏற்படுத்தும் அரூப வனநிலத்தில் இப்போது அமர்ந்திருக்கிறேன்.வனத்தின் மடியில் நின்றுகொண்டிரிக்கிற பிரியம் என் வாழ்நாள் பூரணம் அல்லவா !?  உயிர்களை தோற்றுவிக்கிற உறுப்பு வனங்களின் வானத்தில் தெரிகிறதே! அந்த நிர்வாணத்தின் ரகசியம் தானே இந்த வனத்தின் ஆச்சர்யம்! புலன் விரும்புகிற எண்ணற்ற ஓசையும் வாசமும் பார்வையும் காட்சியும் இந்த வனலோகத்தில் லயித்திருக்கிற சௌகர்யம்தான் என்னை இந்தவெளியில் வாழவிடுகிறது. வனமரங்களின் காதுகளில் இறங்கும் மௌனத்தைத்தான் இப்போது நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு ரம்மியமான மௌனம். இந்த மௌனவெளி தன்னை ஈர்த்துக்கொள்கிற பேரதியபுதுமையை உணர்வுப்பூர்வமாக தரிசிக்கிற தற்சமயம் நான் வனங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன்தான். ஈரம் ஊரிப்போன வனாந்திர அடரின்வெளியில் நடந்துகொண்டிருக்கிறேன்.ஒரு பெரியவானம் இந்தப் பெரிய வனத்தில் அதன் ஈரநீரை மழையென கொட்டிஇறக்கிய எதார்த்தம், கொண்டாடக்கூடய இயல்தான்.அடர்மரங்கள் தலைதொட்டு மரக்கிளைகள் தாண்டி கிளைஇலைகள் வருடி இலைஒட்டிய ஈரமழை இந்த வனத்தின் மடியையும் நனைத்ததுதான் ஆச்சர்யம். ஒரு பெயர்தெரியாத பறவையின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் குரலின் அர்த்தம் என்பெயர்தான். என்னைத்தான் அந்த பறவை அழைக்கிறது.அந்தப்பறவையின் சிறகுகளில் இருக்கிற அடர்ந்த இறகுக்காடொன்றை நினைத்துப்பார்க்கிறேன்.அதன் கதகதப்பை உணர்ந்து என்வெளியின் வனபூமியில் அந்தக் குரல்முகத்தை மரங்கள்தோறும் தேடி தோற்கிறேன்.இந்த புதிய இருப்பு எந்த பிரபஞ்சத்தின் சாயலிலும் இருந்திடாது.தன்னை ஏந்தியிருக்கிற அன்னையின் மடி இப்படித்தான் இருந்திருக்கும். இந்த வனத்தின் தாவரநெரிசலில் நடந்துபோகிற தருணம், உயிர்களின் ஓசை செவிகளில் விழுகிறது. உயிர்களின் ஓலம் சங்கீதத்தை இறைக்கிறது. மறைபொருளான ஏதோவோர் இறை, இந்த வனத்தின் ஓசைகளுக்குள்ளும் தான் இருக்கிறது. மர இலையொன்றில் ஒரு பெருமழை விட்டுவைத்துவிட்டுப்போன ஒரே ஒருத்துளி. தன் இருப்புக்குள் அடக்கிவைத்திருக்கிற துளியின் ஈரம், ஈரத்திற்குள் குளிர்ந்திருக்கிற சொட்டுக்குளிர்மை, இந்தக்குளிர்மை உடுத்திஇருக்கிற துளியின் நெழிவு வாழ்தலுக்கானது தானே ! வனத்தின் நிறத்தை துள்ளியமாகக் குறிப்பிட்டால் மழைஇரவொன்றின் கருப்புதான்.இந்தக்கருப்பு என் கண்களில் தெரிகிறது.கண்களில் நுழைகிற இந்த நிறம் ஒரு இருட்டுவாசத்தை எப்போதுமே கசையவிட்டிருக்கிறது தான். ஒருப்பெருவனத்தில் வழிதேடி இருட்டை உணர்கிற மாகணம் பயம்தான். இந்தபயம் இருட்டை நேசிக்க கற்றுத்தருகிறது. மனிதநிழல்களின் கறைபடாத இந்தபெருவனத்தின் உள்ளே வாழ்வது எத்தனை மௌனமானது?பயமானது?அழகானது? இந்த வனவெளியொன்றில் வாழ்தலுக்கான பூரணத்தை தனியாக உணர்வதென்பது சுகம்தான்.பிரபஞ்சப் பெருவெளியிலிருந்து ஒரு வனநிழலின் வாழ்ந்துபார்ப்பதென்பது புதுமையானதுதான்.
நம் ஆதிச்சுவையை தீண்டியருள வனத்தின் கூடொன்றில் வாழ்ந்துபார்க்கலாம் ...

- அதிரூபன்

No comments:

Post a Comment