Saturday 21 November 2015

உயிர் ஒழுகி ஓடுகிற வெளி

உயிர் ஒழுகி ஓடுகிற வெளி

-------------

பிறஉயிர் நிழல்படாத மரத்தின் சருகுகளாய்
காய்ந்த உயிரின் மீது படர்ந்திருக்கிறது
மனிதஉயிரின் கடைசிப்பிரியம்

கால்தடம் தீண்டாத
கடைசியப் பொதுவெளியில்
உயிருக்கான தீண்டலை அழைத்துச்செல்கிறது
ஒரு தீவிரவாதத்தின் காதல்

அந்நிய காற்றின் வெப்பம்
நுரையீரலின் சதையில் துளையிடும்போது
பசியும் பிணியும்
இருதயத்தில் அமர்ந்து ஊசலாடும்

ஊமைமொழி பேசி
கண்ணீரின் குளிருக்கே சூடுதேடும் தேகம்
எனக்கான ஒரு கதகதப்பை
எந்த தேசத்தில்
எந்த மாதுவின் மறைபொருளை
திறந்துவைத்திருக்கிறது

நம்மைப்போல்
இருப்பு தேடித்திரியிம்
ஓடுகிற நீரின் கடைசிய அமர்வை
எந்த வெளியில் நிறுத்தியிருக்கிறது
இந்த மனிதவெளிப்பள்ளம்

தனிமனித இயல்பு நிலை
எந்தவொரு உயிரின் சுவையை
நாவில் அமர்த்தி ருசித்து
தேகம்வளர்க்கும் ஆதியின் வழக்கத்தை
எனக்கு கற்பித்த இறை
எந்த உடம்பின்மீது மேயத்தொடங்கியிருக்கும்

அகத்தின் கோணப்பார்வையின் சாட்சியங்களுக்கு
எந்த வகையான நோய்பிடித்து
எந்த விதமான காட்சிப்பேரலையை
உடம்புக்கும் உயிருக்கும் ஒட்டாத இடத்தில்
உறங்கவைத்திருக்கிறது

மீன்குஞ்சுகளின் நாவினில்
புழுவின் சதைக்கறியின் பிரியத்தை
எந்த வகையான பசி
நிர்ணயித்தது

உயிர்திண்டு உயிர்வாழும்
பிற உயிர்களின் மீதான பசிக்காதலை
மனிதவெளியின் புறப்பார்வைக்குள்
ஒட்டிவைத்திருக்கிற ஆறாம்அறிவு
எந்த விதமான மிருகம் ..??

- ச.விவேக்

No comments:

Post a Comment