Wednesday 23 September 2015

கவிதை எனப்படுவதும் - அதன் அழகியலும்

அகத்தேடல்கள் கவிதையாகவே இருக்க வேண்டும்.
நல்ல கலையாகவும் இருக்கவேண்டும்.

------------------

வாழ்வின் மீதத்தை கவிதைகளே கொண்டாட வேண்டுகிறேன்.

கவிதை என்பது
பிரபஞ்சத்தின் அறியாமையை கூறி,
அதன் இயல்புநிலைக்குள் மொழியை மண்டியிட்டுக்கிடக்கவைத்தலே ஆகும் .

எல்லா சாமாணியனாலும் கொண்டாடக்கூடிய ஒரு கவிதை
முதலில் மொழியை தீர்மானிக்கிறது
எளிதாக புரிதல்கொள்ளக்கூடிய ஒரு கவிமொழி
ரசனையின் மீதேறியே பயணிக்கிறது

வீரியம் புகுத்திய கவிதையொன்றில்
மிக எளிதாக நாம் உட்புகும்பொது
ஏதாவதொரு கணத்தின் நொடியில்
கவிதையானது நம்மை மெல்ல தடுமாறவைக்கிறது.
கவிதையின் இருப்புநிலையிலிருந்து
பெரும்பாலும் நாம் சிந்திப்பதே கிடையாது.
சில நேரத்தில் கவிஞர்களும் கவிதையை தொலைதூரத்தில் வைத்தே பொருளை முடிவுசெய்கின்றனர்.

கவிதையின் ஆதிப்பொருளை
நாம் எந்த கோணத்தில் வைத்துப்பார்த்தாலும்
அது நாம் பயன்படுத்திய கண்ணாடியாகவே தெரியும்.
மாறாக, ஒரு புதுவடிவத்தில் வடித்த புதுமொழிக்கவிதையொன்றை
நவீனத்திலும் புதுமையிலும் எழுதி
ஒரு பொருள் ஒரு காட்சி புகுத்துகிற இரு கவிதைகளை படிக்கும்போது
நம் அகத்தின் தெளிவு உச்சரிப்புகளால் வியந்துபோகும் .
மற்றும், மொழியின் திறனையும் கவிதையின் பொருளையும் நன்கு அறிந்துகொண்டு பயன்பெறமுடியும் .

வாசகன் எதிர்பார்க்கிற கவிதையானது
ஒரு மழலையின் சிரிப்பில் உதிர்கிற பூக்களாகவே இருக்கவேண்டும் கவிதை.
அது அழகின் சாயலை வெளிக்கொணரவும்
ஆச்சர்யத்தின் சூழலை உருவாக்கவுமே
இத்தகைய கவிதைகள் அமையும்.

நவீனக்கவிதையானது
முதலில் வார்த்தைஜாலம் செய்கிறது
வாசிப்பு நுனுக்கங்களில் மிக அழகிய சொல்லாடலை புகுத்துகிறது.
மொழியின் மேன்மையிலையே பயணிக்கிறது.
புரிதலுக்கு பிந்தைய நிலையிலையே சிலநேரம் மிளிர்கிறது.
எல்லா அகச்சாயலின் வார்த்தைகளையும்
இந்தவகைக்கவிதையே எழுதவைக்கிறது.

பழமையை, நவீன சொல்லாடலில் எழுதி
கவியின் நயத்திற்கு புதுமைசேர்த்து
கவிதையின் முழுமையிலும் ஒரு உயிரோட்டத்தை படரச்செய்து
எல்லா கவிமொழியின் மேன்மையிலும்
எழுதிமுடித்த ஒரு கவிதை
ஐம்பதுவயது இளைஞனாகவே காட்சிதரும்.
அப்படியொரு கவிதையை சமீபத்திய கவிமொழியில்
நவீனத்தில் எதிர்பார்க்கலாம்.

ஒரு கவிதையின் பொருட்டு
நல்ல மனநிலையை தரவேண்டும்.
மேலும், அதன் மேலொரு பிரியத்தை படரச்செய்துவிடவேண்டும்.
அதிகபட்சமாக, இத்தகைய கவிதையை எழுதுகிற கவிஞர்கள் மீது
ஒரு தீராக்காதலை ஏற்படுத்தவேண்டும்.

நானும் சமீபத்திய நாட்களில் இருந்து
கவிஞர்கள்மீது காதல் வயப்பட்டிருக்கிறேன்.
உணர்வுக்கு வடிவம்கொடுக்க கூடியவர்கள்
கவிஞர்கள் மட்டுமே.

சில கவிதையிலிருந்து மீளவே முடியாதநிலை
அன்பின் பிணைப்புசங்கிலியொன்றால் நம்மை முடக்கிப்போட்டுவிடிகிறது.

கவிஞர்கள் அவர்களுக்கான பாதையிலிருந்து
மாறாக பயணிக்கவேண்டுமென நினைக்கிறேன்.

காட்சிகளையும் சூழலையும் கற்பனையையும் கவிதையாக்கி, அதன் வலியை மகிழ்வை கொண்டாடுகிற கணம் போய்,
உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் ததும்புகிற நிமிடகணத்தை கவிதையாக்க வேண்டுமென நினைக்கிறேன்.

ஒரு இரவின் கவிதையை
விடியவிடிய விழித்திருந்து எழுதுகிறமாதிரி அமையவேண்டும்.
இந்த விழித்தல் மகிழ்வை தர வேண்டும்.
இந்த விழித்தல் நல்ல கவிதையை தரவேண்டும்.

கவிதை எழுதுபவர்கள்
எழுதவதோடு மட்டுமில்லாமல்,
கவிதையை கொண்டாடுபவர்களாக இருக்கவேண்டும்.
கவிதையின் மீதேறி எப்போதுமே அமர்ந்து கொண்டிருக்கவேண்டும்.
கவிதைக்கூந்தலில் மலராக மணக்கவேண்டும்.

- ச.விவேக்

1 comment:

  1. வணக்கம்...வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்பா.

    ReplyDelete