Thursday 17 September 2015

வண்ணத்துப்பூச்சி

நடுசாமத்தின்
மௌனம் கிடத்திய அறையில்
ஒரு சாதாரண நிலையில்
அமர்ந்திருக்கிறேன்.

எதையோ தேடிவந்த வண்ணத்துப்பூச்சியொன்று
வெள்ளைச்சுவற்றின் கிளைகளில்
தன் பாதங்களை குவித்து
நகர்ந்து நகர்ந்து நுகர்ந்துகொண்டிருக்கிறது
அதற்கான இனிப்புவொட்டிய தேனொன்றை.

அதன் சிறுஉருவமும்
தியானத்தில் புதைந்த சிறகசைவின் சத்தமும்
மெல்லிய மேனியில் துள்ளிய வண்ணமும்
நான் அமர்ந்திருந்த அறையில்
அது அமர்ந்த இடத்தில்
ஒரு நிழலென விழுந்துகிடக்கிறது.

அதற்கான பிரபஞ்சமாய்
என் அறையை உருவாக்கிக்கொண்டு
அதற்கான நிலையொன்றை
அதன் சிறகுகளில் விரித்து மடக்கி
ஒரு தூரிகையொன்றை சுமந்துகொண்டு
என் அறையுலகில்
என் தூக்கம் கலைக்க குடிபுகுந்துள்ளது

அதன் வருகையை வெறுக்காத என் தூக்கம்
இவ்விரவின் மகிழ்வை
ஒரு வண்ணத்துப்பூச்சிக்கு எழுதிக்கொடுத்திருக்கிறது

லைட்டிங்குழல்
புகைப்பட கண்ணாடி
கடிகார மலர்
இங்கெல்லாம் ஒரு எச்சத்தை
இட்டுவந்த வண்ணத்துப்பூச்சி
இப்பொழுது என் இருக்கையின் அருகே
அமர்ந்திருக்கிறது

என் வலதுகையின் இருவிரல்கள்
அதன் சிறகுகளை
மெல்லத்தொட்டுப் பிடிக்கிறது

ஒருத்துளி தூரிகையை
என் விரல்களுக்கிடையே அப்பிவிட்டு
அதன் சிறகசைத்து பயந்நே கடந்துபோனது
என் அறையின் சன்னலை

அதன் சுதந்திரத்தை
தொட்டுப்பார்த்த என் விரல்களை
வெட்டிவிடுவதா.?
அதன் தூரிகையை
அப்பிக்கொண்ட மகிழ்வில்
முத்தமிடுவதா.?

ஒரு வண்ணத்துப்பூச்சியின் வரவை
விரட்டிவிட்ட பாவத்தில் அமர்ந்து
அது உலத்திவிட்டுப்போன அதன்நிழலை
என் அறையில் தேடிக்கொண்டிருக்கிறேன்,
என் கைவிரலின் தூரிகையை பார்த்தவாறு ..

- ச.விவேக்.

1 comment: