Saturday 26 December 2015

வெய்யில் தேசம்

அது ஒரு வெய்யில் தேசம்

நிறங்களின் ஊடே
சலனங்களை ஏற்படுத்திச்செல்லும்
அரூபத்தின் நிழலில்
நான் அமர்ந்திருக்கிறேன்

தாகத்தின் கடைசிய வாய்
ஒரு சொட்டுத்துளியை
என் குருதிக்குள் உறைத்துவைத்திருக்க,
பேரண்டம் விரும்பிய தாகமொன்று
என்னை விழுங்கியபடி
காய்ந்துகிடக்கிறது

பிரபஞ்சம் விரும்பும் பூரணதேசம்
இந்த வெய்யிலின் கையில்
தவழ்ந்து கொண்டிருக்க,
ஆதவனின் உதடுகள்
முத்தத்தை தயார்படுத்திக்கொண்டிருக்கிறது

மாமழையின் குட்டிகள்
வெய்யிலில் பூத்த வியர்வை கொப்பலங்களாய்,
தேகத்தின் மேலேறி உறங்கிக்கொண்டிருக்கிறது

பகலொன்றின் சிரிப்பில்
ஒன்றிரண்டு சூரியன்
கள்ளிஇலைகளையும்
சாம்பலாக்கி மகிழ்கின்றன

ஒரு வெய்யிலின் முத்தம்
என் நிழல்தொட்டு ஜூவன் செய்தால்,
இந்த பிரபஞ்சம்
அதற்கான ஆடையை உடுத்திவிடும் ..

Monday 21 December 2015

உயிரே

சுஜாதாவ நான் காதலிக்கிறேன்

--------------------

ராத்திரி நேரம்
RAILWAY STATION
அவ தனியா காத்திருந்தா

அங்க வரவேண்டியது ஒரு ட்ரென்
ஆனா, வந்தது ஒரு கடும்புயல்

விளையாட்டுப்பையன் மேல
மின்னல் குறுக்க ஒட
ஆகாயம் நடுங்கி கிடுகிடுத்தது

மூங்கிலும் தென்னமரமும் வயல்வெளியும் சாமிஆட,
தகரகதவ நடனமாடவச்சு..

ச்சோசோ ... னு ,
பெய்யுது மழை

இந்த புயலுக்கு நடுவுல
Platform-க்கு இன்னொரு பக்கத்துல
பச்சையா இருட்டுல ஒரு ஆளோட உருவத்த பாத்தான்

அண்ணே ...., தீப்பெட்டி இருக்கா தீப்பெட்டி .?

அப்ப அடுச்ச காத்துல
அவ போர்த்தி இருந்த கருப்பு போர்வை பறந்துபோச்சு,
அப்பதான் தெரிஞ்சது
அது
ஒரு
பொண்ணு

கருவிழி..
பாத்துக்கிட்டே இருக்கலாம்..
உதட்டோரத்துல புன்னகை..
சின்னதா மூக்கு, அவசரத்துல பொருத்திவச்ச மாதிரி..

ஆனா .. அழகி.. !

பாத்தவுடனே வில்லன்கிட்ட இருந்து அவள காப்பாத்தி,
குதிரமேல அவள ஏத்திட்டு எங்கயாது கூட்டிட்டு போய்டனும்னு துடிச்சான் தவிச்சான்.
.
.
.
மன்னுச்சுக்கோங்க
நான் ஒரு மடையன்
ஆம்பளைனு நெனச்சு உங்ககிட்ட தீப்பெட்டி கேட்டேன்.

அதுக்கு பதில் ஒன்னுமில்ல
வெறும் ..பார்வை..

உம்ம்னு இருக்கிங்களே சிரிக்கமாட்டிங்களா .?
ஏதாது கேட்கமாட்டிங்களா .?

சிகரெட் ...
SORRY ...

அப்படியே , முத்து உதிந்தமாதிரி அவ என்கிட்ட ஒன்னு கேட்டா .
ச்சாயா ...

ரெண்டு பூப்போட்ட கிளாஸ்ல
சூடா டீ எடுத்துக்கிட்டு,
அய்யோ சிந்தீரக்கூடாதேனு
மூச்சு வாங்க வேகமா ஓடினான்.

ட்ரைன்தான்.
ரயில்வேஸ்டேசன்ல நிக்கிறது கௌரவக்கொறச்சல்னு,
கோவிச்சுக்கிட்டு கெம்பீடுச்சு .

ட்ரென் இப்போ கிளம்ப போது

அது,
அவ ட்ரைனோ அவ ட்ரைனோ
அவக்கூட போய்டு .

அவசரப்பட்டு பச்சக்கொடிய வேற காட்டிட்டாரு
இன்னும் வேகமா ஓடுறான்

உஷ்ஷ்..

ட்ரென் போய்டுச்சு
அவளும் போய்ட்டா .

ஓய்ய்ய்.........

- சுஜாதா

Monday 14 December 2015

காதல் என்பது ரசிக்ககூடிய பித்துநிலை

நாந்தான்.....
காதலப் பத்தி பேச வந்திடுக்கேன்.

காதலுங்கிற ஒரு வார்த்தை அல்லது ஒரு விஷயம்
எல்லாருக்குள்ளும் என்னென்ன கத்துதருது,
தனக்கான தன்னை எப்படி தட்டி உசுப்புது,
நமக்குள்ளே மறைஞ்சேஇருக்கிற ஏதோவொன்ன,
அந்தமறைபொருள
எப்படி உணரவைக்கிது னு நினச்சுப்பாக்கும் போதும்
உணர்ந்து பாக்கும் போதும்
ரொம்ப அழகா புன்னகைக்கிது மனசு.
கடலலைய பாத்துகிட்டு இருந்த நான் இப்பெல்லாம் ரசிக்க ஆரம்புச்சிட்டேன்,
மயிலிறகின் நிறங்களுக்குள்ளதான் எனக்கான ஒருத்திய
மறச்சுவச்சிடுக்கேனு
மனசுவிரும்பிற யாரோஒருத்திய அல்லது ஏதோ ஒன்ன நினைக்கும்போதெல்லாம்
வானவில்லின் ரேகைகள முகத்தில பூசிக்கிற மனோபாவம்தான் காதலுக்கான அஸ்த்திவாரம்னு நம்புறேன்.
காதலிக்கத்தான உருவம் தேவை,
காதல உணர மனசுபோதாதா அல்லது
ஒரு இரவின் விழித்தலோ , கருப்பு தனிமையோ போதாதா.
காதல காதலிக்கிறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு.
எனக்கானவொருத்தினு நான் சொல்லும்போது
அவ வானத்தில இருந்து குதிக்கப்போறவளா இருந்தா எவ்வளவு அழகா இருக்கும்.
இந்த மடமையலாம் காதல் ஏத்திக்கிடுது.
அவ இந்த உலகத்தில பிறக்கவே இல்ல, எனக்குள்ளேயே ஏதோவொன்னா மறைபொருளா மறஞ்சுக்கிட்ட சிலசமயம் இந்தமாதிரி பேசவைக்கிறா.
நான் அந்த உணர்வுக்குத்தான் அவள் னு பேரு வச்சிடுக்கேன். அவளத்தான் காதலுனு சொல்லி கூப்பிடுறேன்.
அவள் மறைபொருளா இருக்கிறதாலயே காதலிக்கிறேன்.
கட்டாயம் அவளுக்கு உருவம்கொடுத்து எந்த உடம்புக்குள்ளும் ஊடுருவமாட்டேன்.

காதலுங்கிற ஒரு வார்த்த
இல்ல,
Its something different
Its something special

அவளும் அவனும் இணைந்தது தானே இப்பிரபஞ்சப்பெருவெளி..
எவ்வளவு மெய்யான கூற்று க.வை.சார்.
அவள் அவனுக்கானவன்
அவன் அவளுக்கானவள்
இருவருமே இந்த உலகத்த புதுசா பாக்குறதுக்காகவும் உணர்றதுக்காகவுமே காதலிக்கிறாங்க.
காதல் ங்கிற ஒரு போதை மட்டுமே எல்லா உயிர்களும் உணரக்கூடிய மறைபொருள்.
உயிர்கள்மீது அன்புசெலுத்த ஆகச்சிறந்த அன்பே காதல்தான்.
ஒருவேல காதலுக்கும் அன்புக்கும் வித்தியாசம் இருக்கோ.!?
அதிகபடியான அன்புதான் காதல்னு நான் நினைக்கிறேன் நம்புறேன்.
காதலின்மொழி என்னவாஇருக்கும்.
மௌனமா .?
நிச்சயமா இருக்காது.
காதல்வந்து ஒரு பித்துநிலை.
பைத்தியக்காரனின் புலம்பலைத்தான் காதலுக்கான மொழியா வச்சுக்கலாம்.
ஆகச்சிறந்த அகத்துறவே காதல்தான.
புன்னகைய காதலிக்கிறது எவ்வளவு அழகான விஷயம். தெருக்கடைக்கு பக்கத்தில
ஒரு பிச்சைக்காரகுழந்தையின் புன்னகை அவ்வளவு அழகா இருக்கு.
அது அழுக்குபடிந்த புன்னகையா புறப்பார்வையில விழுந்தாலும்
அந்த புன்னகையோட அழக அகம்தான் நேசிக்கிது. அவ்வளவு காதலிக்கிறேன் அந்த புன்னகைய.
மயிலோட முடிகள எவ்வளவுக்குஎவ்ளோ நமக்குபிடிக்கிது,
நிலாவ எவ்வளவு ரசிச்சிடுக்கோம்,
குழந்தைங்கிற ஒரு வார்த்த நமக்குள்ள எவ்வளவு பரவசமூட்டுது,
கடல் கவிதை இசை ஓவியம் இதெல்லாம் நமக்கு எவ்வளவு பிரியத்த ஏற்படுத்துது.
இந்த பிரியம் ரசனைதான் காதல்னு நினைக்கிறேன்.
இப்போ பிரியம்வைத்த எல்லாமே காதல்தான். அப்ப காதலுங்கிறது அழகான விசயங்கள் மீதுதான் வருதா?
அழகுதான் காதலா ?
நாம எங்க தடுமாறி காதலுல விழுகிறோம்,அழகிலையா.?
அப்படிஇல்ல..
புறப்பார்வைகளில் விழுகிற அழகு எப்பவுமே அழகுதான்.
அழகுஇல்லாத ஒருவிசயத்தின் மீது காதல்வருகிறபோது
நாம உணர்ந்தோ உணரத்தெரியாமலோ
அந்த இடத்தில ஒரு தேடல்வருகிறது. அந்த தேடல் அகப்பார்வைகள்ல விழுகிறது. அகத்துறவு அந்த இடத்தில முளைக்கிறது. அந்த தேடல் மறைபொருளாவே இருந்து அகத்தில் அழகென படிந்த விசயத்தின்மீதோ உருவத்தின்மீதோ காதல்செய்கிறது.

பெண்ணின் மீதோ ஆணின் மீதோ ஏற்படுகிற காதல்
எவ்வளவு பரிசுத்தமானதா இருக்கும்னா,
உணர்தலில்தான் இருக்கிறது.
எவ்வளவோ சமூக பிரச்சனை, வீட்டுச்சூழ்நிலை, பணப்பிரச்சனை இருக்கிற நம்ம தேசத்தில நாட்டுல ஊர்ல
ஒரு பெண் ஆணையோ
ஆண் பெண்ணையோ காதல்செய்வது
எவ்வளவு அபத்தமானது.
அந்த ஒருவர்மீதுதான் தன்னோட எல்லா அன்பையும் செலுத்துவது எவ்வளவு அயோக்கியத்தனமா இருக்கும்னு யோசிச்சுப்பாத்தா,
அந்த இடத்தலதான் மிகப்பெரிய பித்துநிலை இருக்கிறதுனு சொல்லனும்.
அந்த பித்து அவளையோ அவனையோ விட்டுவிழகும் வரை காதல் புனிதமானத இருக்கும்.
அப்படித்தான் நம்பிட்டும் இருக்கேன்...

- ச.விவேக்

Wednesday 25 November 2015

இரவு அவ்வளவு சௌகர்யமானது

நீளிரவிற்கு லாவகமான இசை
ஒரு நரியின் ஊலையின் ஓலமாக
வனத்தின் இருட்டு கிழித்து
இந்த வெள்ளை ராத்திரியின் முச்சந்தியை
தொற்றுப்போகிறது

கதவுகளுக்கு வெளியே தள்ளப்பட்ட
குடிகார கணவனின் நிலையை,
ஆறுவயது மகள்
விழித்திருந்தே காட்சியமைக்கிறாள்

இருளின் சாயலொரு நிழலொன்று
கோயில்வீதியின் பாதை தடங்களில்
உலாவுகிறச்செய்தி,
கௌரி அக்காவின் கனவில்
ஏதோவொன்றை உலறிவிட்டுப்போகிறது

நிலவுக்கும் நட்சத்திரத்திற்குமான இடைவெளி
மயாணத்திற்கும் மந்தைவீடுகளுக்குமான இடைவெளியோடு
ஒப்ப இருக்கிறது

ரயிலில் தற்கொலை செய்துக்கொண்ட
அமுதா அக்காவின் நினைவு,
பட்டணத்திலிருந்து
கிராமம் வந்துகொண்டிருக்கிற
வேறொரு ரயிலோடு
ஏதோ பேசிக்கொண்டிருக்கிறது

பனியில் வேர்த்திருக்கும்
எல்லை சாமியாரின் அரிவாளில்,
எப்போதோ இரவு முத்தமிட்டிருக்கிறது

மலையின் மேலே எறிந்துகொண்டிருக்கிற
அந்த ராடச்சஷ நெருப்பு,
ஒரு கடவுளின் கோபத்தை
பற்றவைத்திருக்கிறது

இரவுகளோடு விழித்திருக்கிற
இந்த பெரும்அமைதி,
இருளின் மடியிலே
உறங்கிக்கொண்டிருக்கிறது

இரவு இரவாகத்தான் இருக்கிறது.
பகலை கொலைசெய்த பாவத்திற்காகத்தான்
இத்தனை அழகாகவும் இருக்கிறது..

- ச.விவேக்.

Monday 23 November 2015

மழையைப்போலத்தான் அவளும்

மழையைப்போலத்தான் அவளும்

அந்தரங்கச்சுகத்தின்
நீர்மையின் குளிரில் வசீகரிக்கப்படுகிற குளிர்மை
இம்மழையின் அனைத்து பொத்தல் இருப்பிலும்
துளிநெழிவை உடுத்தியிருக்கிறது

வெள்ளை மழைக்காக
ஏங்கிய பருவம்,
இப்போது 
மழைக்காதலியின் பெயரோடு
நேற்றைய காலத்தின் இளமையோடு
மழைமழையாய் திரிகிறது
ஒரு பருவப்பெண்னென

கண்ணாடி நிற மழை
ஒரு துளியின் அதிர்வில் உடைந்துபோய்
உடம்பின் பள்ளமேடுகளில்
புரண்டும் ஊறிக்கொண்டும்
தன்நிறப்பொழிவோடு 
குதூகுளிக்க ஆயத்தமாயுள்ளது

சன்னல் விழிகளில்
ஒரு மழைச்சாரலின் கதகதப்பு உரச
ஈரரேகைகளோடு தெளிந்ததேகம்
மழையைப்போர்த்திக்கொள்ள
கைகுட்டையை விரிக்கிறது

பெண்ணென உருமாறிய இம்மாமழை
அதன் ப்ரியராகங்களை,
இருளடர்ந்த இச்செவிட்டு செவியில்
புறாஇறகின் மயிறிலையாய் நுழைகிறது

தேகம்சுடும் இந்த மழைக்குளிர்மை
அவளின் விரல்நிகங்களின் தொடுதலாய்
இப்பேரண்டத்தின் ஆதிமடியை
முத்தமிடுகிறது

எல்லாமொழி பேசும்
இந்த மழையின் வாய்
அழுதும் சிரித்தும் கொண்டிருக்கிற
இம் மாகணம்,
அவள் அவளுக்கான உடையைத்தேடி
மழையை அணிந்துகொண்டாள்

அவள்
கார்காலத்தின் தேவகணப்பட்சி.

இம்மழையின் கந்தலை
கூந்தலில் முடிந்திருக்கிற இவள்,
மழையுமானவள்...

- இலக்கியன் விவேக்

Saturday 21 November 2015

உயிர் ஒழுகி ஓடுகிற வெளி

உயிர் ஒழுகி ஓடுகிற வெளி

-------------

பிறஉயிர் நிழல்படாத மரத்தின் சருகுகளாய்
காய்ந்த உயிரின் மீது படர்ந்திருக்கிறது
மனிதஉயிரின் கடைசிப்பிரியம்

கால்தடம் தீண்டாத
கடைசியப் பொதுவெளியில்
உயிருக்கான தீண்டலை அழைத்துச்செல்கிறது
ஒரு தீவிரவாதத்தின் காதல்

அந்நிய காற்றின் வெப்பம்
நுரையீரலின் சதையில் துளையிடும்போது
பசியும் பிணியும்
இருதயத்தில் அமர்ந்து ஊசலாடும்

ஊமைமொழி பேசி
கண்ணீரின் குளிருக்கே சூடுதேடும் தேகம்
எனக்கான ஒரு கதகதப்பை
எந்த தேசத்தில்
எந்த மாதுவின் மறைபொருளை
திறந்துவைத்திருக்கிறது

நம்மைப்போல்
இருப்பு தேடித்திரியிம்
ஓடுகிற நீரின் கடைசிய அமர்வை
எந்த வெளியில் நிறுத்தியிருக்கிறது
இந்த மனிதவெளிப்பள்ளம்

தனிமனித இயல்பு நிலை
எந்தவொரு உயிரின் சுவையை
நாவில் அமர்த்தி ருசித்து
தேகம்வளர்க்கும் ஆதியின் வழக்கத்தை
எனக்கு கற்பித்த இறை
எந்த உடம்பின்மீது மேயத்தொடங்கியிருக்கும்

அகத்தின் கோணப்பார்வையின் சாட்சியங்களுக்கு
எந்த வகையான நோய்பிடித்து
எந்த விதமான காட்சிப்பேரலையை
உடம்புக்கும் உயிருக்கும் ஒட்டாத இடத்தில்
உறங்கவைத்திருக்கிறது

மீன்குஞ்சுகளின் நாவினில்
புழுவின் சதைக்கறியின் பிரியத்தை
எந்த வகையான பசி
நிர்ணயித்தது

உயிர்திண்டு உயிர்வாழும்
பிற உயிர்களின் மீதான பசிக்காதலை
மனிதவெளியின் புறப்பார்வைக்குள்
ஒட்டிவைத்திருக்கிற ஆறாம்அறிவு
எந்த விதமான மிருகம் ..??

- ச.விவேக்

Wednesday 18 November 2015

இசையெனும் இம்சை

மழையின் ப்ரிய ராகமொன்று
எனக்கு பரிட்சயமான குரலை
ஒருத்துளியின் அதிர்வில்
மெல்லிய சப்தத்திற்கினங்க
ஏதோவொன்றின் உயிரை
விழுங்கியபடி கேட்கிறது

செவிப்புலனின் துவாரஇருட்டிற்குள்
பம்மிய வெளிச்சத்தின் அடரில்
மெல்லியலோசை விழுந்து எழ
அதிகொஞ்சமாய் நனைந்திருக்கிறது
இருளில் சிக்கிய இசை

வனாந்திர காட்டின்
இலைஒன்றின் மேல் படரும் இசை
முயல்குட்டியின் கால்தடங்களில்
மூச்சிழைத்து விம்மிக்கொண்டிருக்கிறது

இருட்கதவுகளுக்குள்
அரும்பத் தொடங்கி
இறுக அணைக்கும் ஓசையின் நிறத்தில்
வெக்க ரேகைகளை படியச்செய்திருக்குறது
அணைப்பின்  கதகதப்பு

இலையுதிர்பொழுதில்
கிளைகளிலிருந்து உதிரத்தொடங்கும்
சருகுகளின் முறிவில்
சிணுங்கி சிணுங்கி கீழே குதிக்கிறது
சருகு குலைத்த இசை

கூடுடைத்து உயிர் துயில
கோழிக்குஞ்சுகளின் கண்விழித்தலில்
தாயின் இறக்கைகளூடான வெம்மை தேசத்தில்
பொட்டியினுள் அடைக்கப்பட்டிருக்கிறது
லோகம் தேடி அழையும் இசை

ஆட்டுக்குட்டியின் பசியை
சிறுவனின் மேய்ச்சலொன்றில் நிரப்பி
புற்களுக்குள் நாவிறக்கி லயிக்க
பனியுடலின் வெளியை
மேயத்தொடங்கியிருக்கிறது பசியின் இசை..

- ச.விவேக்

Friday 30 October 2015

எழுத்து உதிர்த்த ஒன்று கவிதையாக

யாவும் பிரம்மாண்டத்தை தழுவியபடி
அகத்தின் தூய சாயலில்
ஒரு பரந்த வானத்தைப்போல்
விரிந்துகிடக்கிறது

இத்தனைப் பெரிய பிரபஞ்சத்தில்
ஒருவனுக்கான ஜீவிதத்தை
அவன் பிரியப்படுகிற கலையில்
அவனாக்கிக்கொள்கிற ஒன்றை
மாபெரும் எண்ணத்தின் முழுமையால்
மண்டியிட்டுக்கிடக்கிறான்.
இந்த கிடத்தல்
நயப்படுகிற அகத்தின் பேரானந்தத்தை
கொண்டாடும் கணமாக
கலையின் கிளைகளில்
கவிதையென ஓவியமென இசையென சிற்பமென
புலன்விரும்புகிற ஒன்றின் மடியில்
ஊசலாடி மகிழத்தான்.

எழுத்து தருகிற நம்வளர்வை
வேறேதேனும் ஒன்றோடு இணையாக்கமுடியாதென்று
கற்றுக்கொண்ட மனதின்பிடியில்
கவிதையை அமர்த்தி
அதன் உயிரின் மேலேறி
சருகிசருகி விளையாட அல்லது
அது உதிர்த்த இறகுகளை கலைக்க,
கவிதையின் உடம்பை ஏந்திக்கொண்டு
நித்தம் என்னோடு அதை பயணப்படுத்த,
முளைத்தக் கைகளின் விரல்களில்
அதை அடிமைப்படுத்தி ஆனந்தமடைய,
புலனாதிக்கத்தின் பெயர்சொல்லி
கவிதையின் மடிபிடித்து மார்பருகி வாழ,
எனக்குள்ளான என்னோடு இருக்கிற கலைக்கு
உயிர்கொடுத்து அதன் ஜீவிதத்தை உணர
கற்பனைசெய்யப்பட்ட பிரமாண்ட பிரபஞ்சத்தோடே
என்னை வளர்த்துவருகிறேன்.

என்னைச்சார்ந்த உலகம்
என்னை ஏந்தியிருக்கிற பூமியின் மடி
என்னை வாழவிடுகிற பூமியின் வெளி
இவற்றோடு ஒன்றி
கவிதையின் மகத்துவத்தை
சந்தித்த ஆளுமைகளின் முன்நிறுத்தி
என்னை நானே தட்டிக்கொடுத்து,
மாமனித எழுத்துக்களின் பூரண ஆசிவாங்கி
அவற்களின் அகத்தில் திசுவாகினும் நுழைய
வேண்டித்தவிக்கிறது இந்நித்திய ஜீவன்.

இப்பிரபஞ்சம் விரித்த
கலைமடியில்
ஆறாமறிவு உதிர்த்த கவிதையொன்றிற்கு
உயிரையும் உடலையும் தேடி
இனி மறைபொருளாவேன் ..

- ச.விவேக்

Saturday 17 October 2015

முருக பூபதியின் " மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி "

@ மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி @

கோமாளிகளின் வாசத்தை பூமி காற்றோடு பறத்தவிட்டிருக்கிறது.
கோமாளி என்பவர்களின் மறுபக்கமெனும் அகத்தில்
பிரபஞ்சம் புரிந்திடநினையாத ஒரு மாபெரும் பிரம்மாண்டத்தை ஒழித்துவைத்துள்ளது.
சகக்கோமாளிகள் உறிஞ்சும் காற்றைத்தான்
முகமூடிஇல்லாத நம்உரு உண்டுகொண்டிருக்கிறது .
கோமாளிகளின் சாமாணிய பூமியொன்றில்தான்
இனி இந்த பாமரவிரும்பியும் ..

செம்புழுதி பறந்து எரியும்
இந்த நாடகநிலத்தில்தான்
கோமாளிகளின் வியர்வைத்துளிகள்
கலையையுண்ற மகிழ்வில் மரணிக்கின்றன.
சாயங்களால் கோரத்தாண்டவமாடும் கோமாளிகளின் அப்பாவி முகத்தினுள்
ஒரு குழந்தையும் தெய்வமும் மறைந்தே அழுதுகொண்டிருக்கின்றார்கள்.
கலையெனும் நரம்பு புடைத்து
சதைவீங்கி எழுந்த உடல்மயிர்களின் உச்சமே
கலைநயத்திற்கு கிரீடமனிந்து நிமிர்ந்த கோடியுயிர்களின் வளர்ச்சி.
கண்ணாடியின் மிருதுவினுள்
தவக்காதலியான கொறத்தியின் கூசும்புன்னகையை
தேடித்திரியும் ஒரு நாடோடிக்கோமாளியின் இயல்பை
பிரபஞ்சந்தில் எந்த உயிரும் இதுவரை தேடியதில்லை.
தன் ஜென்மத்திற்கான ஒருத்தியை
மயானத்தில் வினவித்திரியும் கோமாளியின் கண்களுள்
வீரியம் வழிந்தோடிகிறது.
ஓலைக்கூடைகளுக்கு கைகால் முளைத்து
புழுதிபடிந்து பறந்துவழிந்த
அவலத்தின் நீண்டச்சாயலொன்றை
பம்மியவெளிச்சத்தின் தெளிந்தகாட்சியாய் தரிசிக்கும்போது
கண்களுக்கான சிரிப்புவொன்றை
உணரமுடிகிறது.
இசையின் முடிச்சொன்றில் பிண்ணிய
இறந்தவளின் மெல்லிய ஓலத்தை
காதுகள் காணநேர்கிறகணம்
ஒரு மாயையொன்றின் உருவை
உருவகித்து தரிசிக்கிறது.
கோரஅவலத்தின் நீண்டகாட்சியங்கள்
தீண்டித்திரியும் உயிரின்உயிரை
ஒரு கோமாளியின் முகம் அப்பட்டமாக்குகின்றன.
உயிரும் உணர்வும் இல்லாத
பொம்மைகளின் உடம்பை சூடும்மாயாவிகள்
கோமாளிகளின் வியர்வையில் முளைத்த உயிராகவே தெரிகிறார்கள்.
ஆஷா என்கிற கோமாளியின் ஒப்பாரியில்
ஒரு உயிருள்ள மானுடக்காதல் வேண்டித்திரியும் பூரணத்தை
ஓலத்தோடு திரியும் கதறலின் அழுகைமொழியை
பொம்மைகளும் கோமாளிகளும் நாமும்
உணருகின்ற ஒருபெருவலியில்
பிரபஞ்சத்தின் அடியில் நான் அழுதுகொண்டிருந்தேன் என்பதே நிஜம்.

ஒரு கலைக்கான மகத்துவத்தை
உள்ளுணர்வை வெளிக்கொணரும் திறனை
வலியின்வலியை உணர்த்துகிற கலைநோக்கத்தை
தலைவணங்குகிற எனுக்குள்ளான என்அகத்திற்கு
பூரணமகிழ்வையும் நிறைந்த கொண்டாட்டத்தையும் வழங்கிய
முருகபூபதி மற்றுமான கோமாளிகளுக்கு
என் கரைபடியாத முத்தங்கள் .

இனி,
என்னுள்ளான ஒரு கோமாளியைத்தேடி ..

- அதிரூபன்  .

Saturday 10 October 2015

அந்தரங்கம்

சிநேகம் மொய்த்து
என்னுடல் மேல்
படரத்துடிக்கும் ஜீவன்,
ஒரு ஹலோ சொல்லி
கை குழுக்குகிறது

அதி சுகந்த ப்ரணயத்தின் உடலில்
மைக்ரோ அளவிளான காமம்
ஆடைக்குமேலேயான ப்யூட்டியில்
சிதறிக்கிடக்கிறது

தேகவெளியின் இருக்கையில்
ஒரு ஜான் அளவிளான இடைவெளியில்
நீளக் கைக்குட்டையும்
ஒரு லேடீஸ் செப்பல்ஸ்ம் .

பேசும் காற்றொன்று
மூச்சுக்குழல் வழி இறங்கி
நேருக்கு நேர்
அந்தரங்கமாய் மாயையாயி
மூச்சுவாங்குகிறது

மழையின் சாரலில் குளித்த
குடைவிரித்தலுக்கு முந்தைய உடல்மாதிரி
நாணச்சுகத்தின் பொழிவில்
துளிதுளியாய் ஆகிறது தேகமேகம்

வெட்கத்தின் நரம்பெல்லாம் மூச்சிழைக்க
உயிரொன்று கேட்கிறது
பொத்தல்கள் நிறைந்த ஆடையை

மௌனத்தின் கிரீடமனிந்த
ஒரு இரவைப்போல்தான் இருக்கிறது
இருவரின் திறந்த முகமும்

கொஞ்சம் இரவைப் போர்த்தி வாழ்கிறது
என் போர்வையும்
உன் ஆடையும் ...

- ச.விவேக்.

Friday 2 October 2015

சகான்மா

பிரபஞ்சம் அதன் இறகுகளை உதிர்த்துக்கொண்டிருக்கிறது
வர்ணபூச்சியொன்றிற்கு காதுக்குள் கிச்சுகிச்சு மீட்டும் சுகத்தை
ஒரு குழந்தையின் கைவிரல் பூரணமாக்கி பூரணமாக்கி ரசிக்கிறது
ரட்சிக்கப்பட்ட ஒருத்தி
சாலையில் இறந்துகிடக்கிற ஒரு வர்ணபூச்சிக்குக்கு
உயிர்கொடுக்கிறாள்
இப்போதெல்லாம் ஆதவன்
குளிர்மையையே லோகம் பூசுகுறான்
கொலைகாரனின் கைவிரல்தான்
எறும்புக்கு தீணி போடுகிறது
ஒரு யாசகப்பார்வையின் எதிர்பார்ப்பில்
நாம் அடிமையாகும் சினேகம்
முளைத்துவருகிறது
இங்கெல்லாம் உறைந்துபோகிற நம் அகப்பிளவுகளில்
ஒரு கவிதை ஜீவிதம்ஆவதை
எதைகொண்டு நிறுத்த சகான்மாவே .....?!

Thursday 1 October 2015

கவிதைகளுக்கான வெளி

- அகத்தேடல் ஒரு மாபெரும் பிரபஞ்சம் -

-----------------------

கவிதை எழுதக் காத்திருக்கிற மனம்
ஒரு பிரம்மாண்டத்தின் உச்சியில்
தலைகீழாய் தொங்குகிற ஏதோவொன்றின் உயிரை
கைவசப்படுத்துகிறது

உயிர் ஒழுகி ஓடுகிற வெளியில்
ஒரு மானுடப்புன்னகையை நிறுத்தி
ஆன்மாவின் உருவிற்கு
சிரிக்க கற்றுத்தருகிறது

வனக்காட்டின் இசைஓலங்களில்
அதன் பிரியராகத்தைத் தடவி
சரிந்த சருகுகளின் மேலேறி
தனக்குப்பிடித்தமான கீதத்தை
புல்லாங்குழல்வெளி உரித்தெடுக்கிறது

யாசகமனத்தின் தூய்மையை
அதிகொஞ்சமாய் குளிர்விக்க
வியர்வைத்துளியில் நனைந்த நாணயத்தை
பேரன்போடு பரிசளிக்கிறது

மழலையின் நகத்தின்அளவாவது
ஒரு கவிதைக்கான செரிவு நிறைந்திருக்க
யுக தூயசாட்சிகளின் நிறைவோடு
ஆசிர்வதிக்கிறது

லோகம் பெய்யும் மழையில்
ஒரு காகிதத்தையும் பேனாவையும்
தன் விரும்பிய பக்கத்தில் மறைத்துவைத்து
பாதுகாக்கிறது

துளி ஜலம் கொணரும் குளிர்மையை
ஒரு இரவில் போர்வையில் போர்த்தி
அதனுள்ளே குவிந்த மாறுபட்ட உணர்வை
ஜென்ம பூரணமாக்க விரும்புகிறது

ஒரு எறும்பின் பெரிய பற்களுக்கிடையே
ஒட்டியிருக்கிற சிறுசதைவலியில்
ஒரு குழந்தையின் அழுகையை
அலறலாக்கி பூசியிருக்கிறது

அகத்தூய்மையின் உணர்தலை
ஒரு கவிதையாக்கி மகிழத்தான்
இச்ஞென்மத்தின் வெளியை
ஒரு காகிதமாக்க பிராத்திக்கிறது ..

- ச.விவேக்.